குடியுரிமை திருத்தச் சட்டம்: வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை.. ஸ்மிரிதி இரானி வலியுறுத்தல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் வன்முறையை தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் அந்த சட்டம்.
இந்த சட்டம், மதரீதியாக முஸ்லிம்களை பாகுபாடு காட்டுவதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
டெல்லியில் ஜமியா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி இன்று(டிச.20) நிருபர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. யாருடைய உரிமையையும் பறிக்கப் போவதில்லை. இந்த சட்டத்திற்கு எதிராக வேண்டுமென்றே போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். வன்முறைகளை தூண்டி விடுவோர் மீதும், வன்முறைகளை ஆதரிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.