பிரதமர் மோடியின் புது இலக்கு பர்ஸ்ட் டெவலப் இந்தியா.. தொழில்துறையில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளில் கவனம்..
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவது சாத்தியம்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அசோசேம் எனப்படும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் 100வது ஆண்டு தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது : பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல துறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடுகள்(எப்.டி.ஐ) அதிகரித்துள்ளது. எப்.டி.ஐ என்பதற்கு நான் இன்னொரு பொருள் வைத்துள்ளேன். பர்ஸ்ட் டெவலப் இந்தியா என்பதுதான் அது. தொழில்துறையில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஓய்வின்றி கடுமையாக உழைத்து வருகிறோம். ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் என்பது முடியாத காரியமல்ல. ஆனால், அது உடனடியாக நடந்து விடாது. நாம் தொடர்ந்து உழைத்து அந்த இலக்கை எட்டுவோம். வங்கித்துறையில் நிலவிய தேக்கநிலையை போக்கியுள்ளோம். எனவே, வங்கி துறை சார்ந்த தொழில்களில் துணிச்சலாக முதலீடு செய்யுங்கள்.இவ்வாறு மோடி பேசினார்.