பீகாரில் இன்று பந்த்.. எருமைகளை வைத்து சாலை மறியல்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகாரில் லாலுவின் ஆர்.ஜே.டி. கட்சியினர் பந்த் நடத்துகின்றனர். எருமைகளை வைத்து சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டும் விதமாக உள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் உள்ளதால் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆயினும் தற்போது எதிர்ப்பை பார்த்து முதல்வர் நிதிஷ்குமார் கொஞ்சம் மாறியிருக்கிறார். மத்திய பாஜக அரசு அடுத்து கொண்டு வரவிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்ப்போம் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகாரில் முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

அதே சமயம், அக்கட்சியினர் பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தர்பங்காவில் அக்கட்சியினர் மேல்சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வைசாலியில் எருமைகளை கொண்டு வந்து சாலைகளில் நிறுத்தி, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் டயர்களை கொளுத்திப் போட்டு சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆளும் ஐக்கியஜனதாதளம்-பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார்.

More News >>