பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

தமிழ். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘மூன்று முடிச்சு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து, 6 பிலிம் பேர் விருதுகள், ‘மூன்றாம் பிறை’ படத்திற்காக தமிழக அரசின் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

ஸ்ரீதேவி தமது 4 வயதிலேயே திரை துறைக்கு வந்தார். 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘துணைவன்’ என்ற படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘16 வயதினிலே’ படத்தில் அவர் நடித்த மயில் என்ற கதாபாத்திரமும், ‘மூன்றாம் பிறை’ படத்தில் குழந்தைத்தனமான அவரது நடிப்பும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராகக் கொண்ட இவர், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்து மும்பையில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், அவர் மரணமடைந்திருப்பது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News >>