புதுச்சேரி, கேரள முதல்வர்களிடம் பாடம் கற்க வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களிடம் எடப்பாடி பழனிசாமி பாடம் கற்று கொள்ள வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் இன்று(டிச.23) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக ராஜரத்னம் ஸ்டேடியம் வரை கண்டனப் பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திமுக பேரணிக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி, இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக நேற்றிரவு 8.30 மணியளவில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். மனுதாரர் தரப்பிலும், அரசுதரப்பிலும் வாதிடப்பட்டது. திமுகவுக்கு நோட்டீஸ் அளிக்கப்படாததால் அவர்கள் ஆஜராகவில்லை. நீண்ட நேர வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஜனநாயக நாட்டில் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பேரணி நடத்தப்பட வேண்டும். ஆனால், காவல்துறையினரின் நிபந்தனைகள் மீறப்பட்டால் அதை வீடியோவில் பதிவு செய்து சாட்சியமாக்க வேண்டும்" என்று கூறினர்.
இதையடுத்து, இரவு 10 மணிக்கு அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:திமுக நடத்தும் பேரணியை தடுத்து விட வேண்டுமென்று அதிமுக கடுமையாக முயற்சி செய்தது. இதன்மூலம், திமுக பேரணிக்கு விளம்பரம் தேடிக் கொடுத்த அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
திமுக நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு நோட்டீஸ் வராததால் நாங்கள் ஆஜராகவில்லை. ஆனால், இப்போது கிடைத்த செய்தி, திமுக பேரணிக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு ஸ்டாலின், "எந்த முதலமைச்சர்? முதல்ல எடப்பாடியை போய் புதுச்சேரி முதல்வர், கேரள முதல்வர், மேற்கு வங்க முதல்வர்... இவங்க கிட்ட போய் பாடம் கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்..." என்று பதிலளித்தார்.