ஜார்கண்ட் தேர்தல் நிலவரம்.. ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சி?
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி தற்போது 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தொடர்ந்தால், அந்த கூட்டணி ஆட்சியமைக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது அங்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக போட்டியிட்டது. அதன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம்(ஜே.டி.யு), ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யு) ஆகியவை தனித்தனியே களமிறங்கின. ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
மொத்தம் 79 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தற்போது 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதே சமயம், ஜே.எம்.எம். கூட்டணியில் அந்த கட்சி 43 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்த அணியில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்.ஜே.டி. 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எனவே, ஜே.எம்.எம். கூட்டணி இந்த 42 இடங்களில் வென்றாலே ஆட்சியமைத்து விடலாம். மெஜாரிட்டிக்கு 41 இடங்களே தேவை என்ற நிலையில், தற்போது ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் தெரிகிறது.