ஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.
ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று(டிச.23) காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிட்டது. அதை எதிர்த்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், பாஜகவினர் தாங்கள் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறிவந்தனர். இந்நிலையில், கருத்து கணிப்புகளின்படி ஜே.எம்.எம்- காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜே.எம்.எம். 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஜே.எம்.எம். கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, பர்ஹயத் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மேலும், முதல்வர் ரகுபர்தாஸ் தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சர்யுதாசிடம் தோல்வியடைந்தார்.
அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரன், கடுமையாக உழைத்த தனக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்றும் கூறியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.