ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்தியது உ.பி. போலீஸ்
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டம். சிறுபான்மையிருக்கு எதிராக உள்ளதாக கூறி, அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் மாணவர் போராட்டங்களில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
மேலும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று உ.பி.க்கு சென்றனர்.
அவர்கள் சென்ற கார் மீரட் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. உ.பி. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, மீரட் நகரில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்தும் அவர்களை அனுமதிக்காததால், இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர்.