வளைய சூரியகிரகணம் தமிழகத்தில் தெரிந்தது..
தமிழகத்தில் சூரிய கிரகணம் நன்றாக தெரிந்தது. சென்னை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் முழுமையாக பார்த்தனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனை சுற்றி வரும் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியன் மறைகிறது. இப்படி சூரியன் மறையும் நேரம்தான் சூரிய கிரகணம். இதில், சூரியன் முழுமையாக மறையாமல், நடுப்பகுதி மட்டும் மறைந்து சூரியனை சுற்றி ஒரு சிவப்பு வட்டம் தோன்றும். இதை வளைய சூரிய கிரகணம் என்பார்கள். இன்று அந்த சூரியகிரகணம்தான் ஏற்பட்டது.
இந்த சூரியகிரகணத்தை, இந்தியாவில் ஒடிசா, குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நன்றாக பார்க்க முடிந்தது. கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் சூரியனை சந்திரன் மறைத்த காட்சி நன்றாக தெரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நன்றாக தெரிந்தது. இதை மக்கள் பார்த்து ரசித்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான மக்கள் வந்திருந்து பார்த்தனர். காலை 8.08 மணிக்கு கிரகணம் தொடங்கி காலை 11.16 மணி வரை கிரகணம் நீடித்தது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நேரத்தில் கிரகணம் நன்றாக தெரிந்தது. குறிப்பாக, 9.35 மணிக்கு சந்திரன் முழுமையாக சூரியனை மறைத்து, சிவப்பு வளையம் போன்று பார்க்க முடிந்தது.
சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு முதல் நடை சாத்தப்பட்டிருக்கிறது. இன்று பகல் 2 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. இதே போல், சபரிமலை ஐயப்பன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் நடைசாத்தப்பட்டுள்ளது. சூரியகிரகணம் பிடித்த நேரத்தில் பெரும்பாலான மக்கள், உணவு கூட சாப்பிடாமல் விரதம் கடைபிடித்தனர்.