ஜெயலலிதா சொத்துக்கள் உரிமை கோரிய சசிகலா... வருமான வரித்துறையில் பதில்..

கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா பங்குதாரராக இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் இறந்த பிறகு தனக்குத்தான் சொந்தம் என்று சசிகலா நடராஜன் உரிமை கோரியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா நடராஜன் ரூ.1694 கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்தி பல சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்றும், ரூ.250 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு கடன் கொடுத்திருக்கிறார் என்றும் வருமான வரித் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்காமல் கால அவகாசம் கேட்டிருந்த சசிகலா தரப்பு ஆடிட்டர், கடைசியாக டிசம்பர் 11-ம் தேதி வருமான வரித்துறையினரிடம் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.1900 கோடிக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியது மற்றும் கடன் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

மேலும், கடந்த 2016-17, 2017-18-ம் நிதியாண்டுகளில் நமது எம்.ஜி.ஆர், ஜெயா பிரின்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சசிகலாவே உரிமையாளராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கோடநாடு எஸ்டேட், ராயல் வேலி எக்ஸ்போர்ட், கிரீன் டி எஸ்டேட், ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி என்டர்பிரைஸஸ் போன்றவற்றில் சசிகலா பங்குதாரராக இருந்தார். இந்தோ- தோஹா கெமிக்கல் அண்ட் பார்மா லிமிடெட் மற்றும் ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் சசிகலா இருந்தார்.

ஜாஸ் சினிமாஸ் லிமிடெட்டில் 41.66 லட்சம் பங்குகளையும், அரே லேண்ட் டெவலப்பர்ஸில் 3.6 லட்சம் பங்குகளையும் ராம்ராஜ் அக்ரோ மில்ஸில் 36,000 பங்குகளையும் சசிகலா வைத்திருந்ததாக விளக்கம் அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தன்னுடன் ஜெயலலிதாவும் பங்குதாரராக இருந்த சொத்துக்கள் அனைத்துக்கும் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு, தானே உரிமையாளர் என்றும் சசிகலா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More News >>