உ.பி.யில் 144 தடை யுத்தரவு.. இன்டர்நெட் சேவை முடக்கம்
உ.பி.யில் வதந்தி பரவுவதை தடுக்க இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின. பின்னர், டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போராட்டங்கள் பரவியது. உ.பி.யில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. மீரட் உள்பட சில இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் 19 பேர் வரை உயிரிழந்தனர். ஏராளமான போலீஸ், அரசு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
கடந்த 2 நாட்களாக உ.பி.யில் மாமூல் நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உ.பி.யின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், சஹரன்பூர், காஜியாபாத், முசாபர்நகர், ஃபிரோசாபாத், மதுரா, ஷாம்லி மற்றும் அலிகார் உள்பட 14 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போனில் வதந்தி பரப்புவதை தடுப்பதற்காக இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மீரட், அலிகார், அயோத்தி உள்ளிட்ட பகுதகளில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.