இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடை.. ஸ்டாலின் கவலை..

இலங்கையில் சுதந்திரதினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இது குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

இலங்கையில் வரும் பிப்ரவரி 4ம் தேதி, அந்நாட்டின் 72-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகு 1949ம் ஆண்டு முதல், சுதந்திரதின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்பட்டு வந்தது.கடந்த 2016ம் ஆண்டில் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன, சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதம் பாட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதி கோத்தபய ராஜபக்சே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, இனிமேல் சுதந்திரதினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை போன்று, இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் என்று இலங்கை அமைச்சர் ஜனக பண்டாரா தென்னகோன் கூறியுள்ளார்.இந்த அறிவிப்பிற்கு இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு்ள்ள பதிவு வருமாறு:

இலங்கையில் சுதந்திரதினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும் என்று அந்நாட்டு அரசு எடுத்துள்ள முடிவை கேட்டு கவலையடைகிறேன். இது போன்று பெரும்பான்மை எதேச்சதிகாரப் போக்கு, தமிழர்களை மேலும் ஒதுக்கி விடும். எனவே, இந்தியப் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் 15 சதவீத மக்கள் தமிழர்கள். மேலும், 10 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இவர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென்றுதான் 2016ல் மைத்ரிபாலா சிறிசேன, அங்கு தமிழில் தேசியகீதம் இசைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.

ஆனால், இப்போது கோத்தபய ராஜபக்சே, பெரும்பான்மைப் போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் வெற்றி பெற்றதுமே தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் எழுத்து பலகைகள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>