பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம்.. பாஜக அரசு உத்தரவு
ஹரியானா மாநிலத்திலுள்ள பள்ளிகளில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது கட்டாயம் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர், ராம் அபிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் அரசு, பள்ளிகளில் காலை இறைவணக்கத்தில் பகவத் கீதை சுலோகங்களைக் கூற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தையும் இறை வணக்கத்தின்போது உச்சரிப்பதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து அம் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா, “ஹரியானா மாநில பள்ளிகளில் பகவத் கீதை சுலோகம் சேர்க்கப்பட்டதால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் வளர்ந்துள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே, இறை வணக்கத்தில் காயத்ரி மந்திரத்தையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கை, பிப்ரவரி 27-ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றும், பள்ளி மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹரியானா அரசின் இந்தச் செயல் பள்ளி மாணவர்களின் உள்ளத்தில் மத உணர்வுகளை வளர்த்துவிடும் என்றும் இந்துத்துவா கருத்துகளை பாஜக அரசு பள்ளிகளில் புகுத்துகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.