திறன் இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தாத 9 ஆயிரம் பேர் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேர் வங்கிகளில் பெற்ற கடன் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியைச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் அதனைச் செலுத்தாமல் இருப்பவர்களை ‘திறனுள்ள கடனாளிகள்’ என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அந்த வகையில், 2017 செப்டம்பர் 30 வரை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் பாக்கியை, சுமார் 9 ஆயிரம் பேர் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ள முதல் 11 பேரின் மொத்தக் கடன் அளவு ரூ. 26,000 கோடி என்று தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில், கௌதம் அதானியின் ‘சம்பந்தி’யான ஜதின் மேத்தாவும் இடம் பெற்றுள்ளார்.
இவரின், வின்சம் டைமண்ட் - ஜூவல்லரி மற்றும் பாரவர் பிரீசியஸ் ஜூவல்லரி - டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடன் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடம் பெற்ற கடன் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ மதுபான ஆலையின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்ற கடன் ரூ. 3,000 கோடி.
தொழிலதிபர் பிரபோத் குமார் திவாரிக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெற்ற கடன் ரூ.2,416 கோடி. ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் ரூ. 2,730 கோடி கடன் பெற்றுள்ளது. இதேபோல, 50 நிறுவனங்கள் ரூ. 250 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளன. இந்திய வங்கிகளின் வராக் கடன் அளவு கடந்த ஆண்டில் மட்டும் 27 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.