யார் அவர் என்று கேட்ட பாஜக அமைச்சரை கிண்டலடித்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்...
பிரசாந்த் கிஷோரா... யார் அவர்? என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கேட்டார். அதற்கு பிரசாந்த் கிஷோர் நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார்.
பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014ம் ஆண்டில் இவரது ஐ பேக் நிறுவனத்தில் 2 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த பிரசாந்த் கிஷோர்தான் கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடிக்கு பிரச்சார வியூகம் அமைத்து கொடுத்தவர். இவரது பிரச்சார யுக்தியால்தான் மோடி என்ற பிம்பத்திற்கு கவர்ச்சி விளம்பரம் செய்து பாஜக மெஜாரிட்டி பெற்றது என்று பேசப்பட்டது.
இதன்பின், பல கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார். அவரது வியூகங்களில் அசந்து போன பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரை தனது ஐக்கிய ஜனதா தளம்(ஜே.டி.யு) கட்சியின் தேசிய துணை தலைவராக நியமித்தார். தற்போது பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஜே.டி.யு - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், டெல்லி பாஜகவுக்கு மேலிடப் பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி நேற்று(டிச.28) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் நிருபர்கள், ஆம் ஆத்மிக்கு பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமாகி இருப்பது பற்றி கேட்டனர்.
அதற்கு அமைச்சர் ஹர்தீப் புரி, பிரசாந்த் கிஷோரா? யார் அவர்? என்று கேட்டார். அதற்கு நிருபர்கள், அவர்தான் பிரதமர் மோடிக்கு 2014ல் வியூகம் வகுத்து கொடுத்தவர் என்றனர். அதற்கு அமைச்சர் ஹர்தீப் புரி, அப்படியா.. நான் அப்போது அங்கு இல்லை. அவரை எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.
அமைச்சரின் இந்த பதில் குறித்து பிரசாந்த் கிஷோரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பிரசாந்த், அவர் சீனியர் அமைச்சர். என்னை போன்ற சாதாரண மனிதர்களை ஏன் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்? உ.பி, பீகாரில் இருந்து என்னை போல் லட்சக்கணக்கான மக்கள், டெல்லிக்கு வந்து பல போராட்டங்களுடன் வாழ்கிறார்கள். எல்லோரையும் எப்படி அமைச்சருக்கு தெரிந்திருக்கும்? என்று நக்கலாக பதில் கொடுத்தார். கடந்த 2014ல் மோடியே இந்த பிரசாந்தின் சொல்படி கேட்டு பிரசாரம் செய்தார். அவரை தெரியவில்லை என்று ஏளனமாக சொன்ன அமைச்சர் ஹர்திப் புரிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.