கோலம் போடுவது தேசவிரோதம்.. எடப்பாடி அரசுக்கு பாராட்டு.. கனிமொழி கிண்டல்

வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சில மாணவிகள் ஈடுபட்டனர். அதில் குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 6 பெண்களை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசன்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும். TNopposeCAA, NRC_CAA_NPRஇவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு :நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

 

More News >>