ஜார்கண்ட் தேர்தல் தோல்வி.. பழங்குடியினர் நம்பிக்கையை இழந்து விட்டதா பாஜக?

ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமே பழங்குடியினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்து விட்டதுதான் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜே.எம்.எம். 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஜே.எம்.எம். கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, பர்ஹயத் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

அதே சமயம், 65 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறி வந்த பாஜக, வெறும் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அக்கட்சி, ஆட்சியை இழந்ததற்கு முக்கிய காரணம், பழங்குடியினருக்கான தொகுதிகளில் அந்த கட்சி தோல்வியுற்றதுதான். ஜார்கண்டில் பழங்குடியினருக்கு(எஸ்.டி.) ஒதுக்கப்பட்ட 28 தனி தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக 11 தனி தொகுதிகளை வென்றிருந்தது.

இதே போல்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பாஜகவுக்கு பழங்குடியினரின் வாக்குகள் கிடைக்கவில்லை. சட்டீஸ்கரில் கடந்த ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 29 தனி தொகுதிகளில் 3 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியது. அதே சமயம், அதற்கு முன்பு 2013 தேர்தலில் 13 தனி தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 47 தனி தொகுதிகளில் 16ல் மட்டுமே பாஜக வென்றது. அதே சமயம், 2013ல் நடந்த தேர்தலில் 31 தனி தொகுதிகளை பாஜக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, மொத்தத்தில் பாஜக கட்சி தற்போது மேல்தட்டு மக்களின் கட்சியாக தெரியத் தொடங்கியுள்ளது. ஜார்கண்ட்டை பொறுத்தவரை சந்தால் பர்கானா குடியிருப்பு சட்டம், சோட்டாநாக்பூர் குடியிருப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து, பழங்குடியினரின் நிலங்களை பாஜக அரசு ஆர்ஜிதம் செய்தது. இதற்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியிருந்தனர். மேலும், அந்த மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரே தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வந்தார். கடந்த முறைதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரகுபர்தாசை பாஜக முதல்வராக்கியது குறிப்பிடத்தக்கது.

More News >>