தமிழ்நாடே போர்க்கோலம்.. எடப்பாடி அரசுக்கு நன்றி.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி என்று ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சில மாணவிகள் ஈடுபட்டனர். அதில் குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 5 பெண்கள் உள்பட 8 பேரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் வீட்டு வாயில்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கோலம் போடப்பட்டது. மேலும், அவர்கள் அதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இதையடுத்து, கோலம் போட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள், இன்று(டிச.30) அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து, அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டாலின், ஒரு பதிவு போட்டார். அதன் விவரம்:

மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! #DMKkolamProtest

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>