உள்ளாட்சி தேர்தல்-இன்று வாக்கு எண்ணிக்கை
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.நேற்று 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதன் பின்பு, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல் பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் சில இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 9 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதன்படி, கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியத்தில் விலங்கல்பட்டு கிராம ஊராட்சி 4–வது வார்டு 242 ஏவி வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர், நாலுமாவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு 67ஏவி, 68ஏவி, 69ஏவி, 70ஏவி, 71ஏவி வாக்குச்சாவடிகள், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தாணிகோட்டகம் கிராம ஊராட்சி 2–வது வார்டு 119–வது வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், உப்புக்கோட்டை கிராமம், கிராம ஊராட்சி 8–வது வார்டு 52ஏவி வாக்குச்சாவடி, மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 91–வது வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஜன.2) எண்ணப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கவுன்சிலர் தேர்தல் நடைபெறும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்