ஊராட்சி ஒன்றியத் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக தோல்விக்கு அ.ம.மு.க. போட்டியிட்டு அக்கட்சியின் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், 515 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடந்தது. ஜன.2ல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி, மூன்றாவது நாளாக இன்று(ஜன.4) காலை வரை நீடித்தது.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த கட்சி 97 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவியிடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

தஞ்சை டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என்பதையும் தாண்டி 23 மாவட்டங்களிலும் அந்த கட்சியினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். 2 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியை கைப்பற்றும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும், 1400 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் இடங்களில் திமுக, அதிமுகவின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்துள்ளதாகவும், 20 ஒன்றியங்களில் தலைவர் பதவியை நிர்ணயிக்கப் போவதும் தங்கள் கட்சியின் கவுன்சிலர்கள்தான் என்றும் அ.ம.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில் பல மாவட்டங்களிலும் ஆளும்கட்சியாக இருந்தும் பல தகிடுத்தத்தம் செய்து அதிமுகவினர் தோற்றதற்கு அ.ம.மு.க.வினர் போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்று பேசப்படுகிறது.

More News >>