அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை குஜராத் சபாநாயகர் பேச்சு
"அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் இல்லை.ஒரு பிராமணர்தான் அதை தயாரித்தார்" என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி கலந்து கொண்டார். இந்த விழாவில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை, ஒரு பிராமணர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது,அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு எப்படி தயாரிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? 60 நாட்டு அரசியலமைப்பு சட்டங்களை படித்து அதை தயாரித்தது யார் தெரியுமா? நாமெல்லாம் அரசியலமைப்பு சட்டத்தை தயாரித்தது அம்பேத்கர் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை தயாரித்தது ஒரு பிராமணர். அவர் பெனகல் நரசிங்க ராவ்(பி.என்.ராவ்).
இந்த விஷயத்தை அம்பேத்கரே கூறியிருக்கிறார். அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அவர் பேசும் போது, எனக்கு அளிக்கப்படும் பெருமை எல்லாம் இந்த பி.என்.ராவைச் சேரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர்கள் எப்போது மற்றவர்களை முன்னுக்கு நிறுத்தி, பின்னால் இருந்து செயல்படுபவர்கள் என்பது வரலாறு. அப்படித்தான் அம்பேத்கரை முன்னுக்கு நிறுத்தியவர் பி.என்.ராவ்.
இன்னொரு விஷயம் தெரியுமா? நோபல் பரிசு பெற்ற 9வது இந்தியரான அபிஜித் பானர்ஜி யாரென்று தெரியுமா? அவரும் பிராமணர்தான். ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற 8 இந்தியர்களில் 7 பேர் பிராமணர்கள்தான். இப்போது டெல்லியில் நடந்த தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய ராஜேஷ் சுக்லா ஒரு பிராமணர்.
இவ்வாறு பிராமணர்களின் பெருமைகளை ராஜேந்திர திரிவேதி அடுக்கினார். இவரும் ஒரு பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிவேதியின் பேச்சை முதமைச்சர் விஜய் ரூபானி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.