நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஆணையர் பழனிசாமி பதில்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எப்போது? என்பது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46 சதவீத வாக்குகள் பதிவாகின. சில பிரச்னைகளால் 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணியில் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.மொத்தம் 16,570 பதவிகளுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஜன.6ம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த உள்ளாட்சி மன்றங்களில் பதவியேற்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் நன்றாக நடைபெறுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் தொடர்பாக, திமுக எழுப்பிய புகார்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, விரைவில் அந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று பழனிசாமி பதில் அளித்தார்.

More News >>