ராகுலும், பிரியங்காவும் வன்முறையை தூண்டுகிறார்கள் அமித்ஷா குற்றச்சாட்டு

ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ், திரிணாமுல், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டம் குறித்து மக்களுக்கு விளக்குவதற்காக வீடு, வீடாக பிரச்சாரம் செய்யும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் லஜ்பத் நகரில் தொடங்கி வைத்தார். முன்னதாக, அவர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி, வன்முறையை தூண்டி விடுகிறார்கள். குறிப்பாக, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வன்முறைகளை தூண்டி விடுகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களை ஏன் கண்டிப்பதில்லை. பாகிஸ்தானில் குருத்வாரா மீதும், சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராகுலும், பிரியங்காவும் கண்ணை திறந்து பாருங்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அந்த தாக்குதல்தான் பதில். இது போன்று பாகிஸ்தானில் முன்பு தாக்கப்பட்டவர்கள் இங்கு வராமல் வேறு எங்கே செல்வார்கள்? குடியுரிமை சட்டத்தால் தலித் மக்களுக்கும், ஏழைகளுக்கும்தான் பலன் கிடைக்கும். எனவே, இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள், தலித் மக்களின் விரோதிகள். கெஜ்ரிவால் தலித் மக்களின் விரோதி.

இந்திய குடிமக்கள் யாருக்கும் எதிராக எந்த பிரிவும் இந்த சட்டத்தில் இல்லை என்பதை சிறுபான்மையினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

More News >>