ஜெ. தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

டிசம்பர் 31க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர், ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 2015ஆம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவரது மறைவிற்குப் பிறகு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் திரைப்பட பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ் கட்சி சார்பில் லோகநாதன் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டதின் காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் 31க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

More News >>