ஆளுநர் உரையை திமுக புறக்கணித்தது.. காரணம் குறித்து ஸ்டாலின் பதில்
உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, 7 பேர் விடுதலை, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, தனது உரையைத் தொடங்கினார். அவர் உரையைத் தொடங்கியதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரினார். அவருக்கு அனுமதி தரப்படவில்லை. ஆளுநர் புரோகித் தனது உரையை வாசித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், ஸ்டாலின் தலைமையில் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அபுபக்கர், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினரான தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த ேபட்டி வருமாறு:தமிழக அரசின் கடன் தொகை 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பற்றி சட்டசபையில் விவாதிக்க வேண்டும். அதே போல், ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதே போல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவது, உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் ஆகிய பிரச்னைகளுக்காக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.