கருப்பு சட்டையணிந்து  சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபைக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, தனது உரையைத் தொடங்கினார். அவர் உரையைத் தொடங்கியதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரினார். அவருக்கு அனுமதி தரப்படவில்லை. ஆளுநர் புரோகித் தனது உரையை வாசித்தார்.

அப்போது திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், ஸ்டாலின் தலைமையில் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அபுபக்கர், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் உறுப்பினரான தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கருப்பு நிற டி-சர்ட் அணிந்து வந்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நோ சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்று எழுதப்பட்டிருந்தது.சட்டசபைக்கு வெளியே அ.ம.மு.க. பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரனை தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.

More News >>