டெல்லி சட்டசபைக்கு பிப்.8ம் தேதி தேர்தல்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்.8ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபை பதவிக்காலம் பிப்.22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

இதன்படி, டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்.8ம் தேதி தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை ஜன.14ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஜன.21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மறுநாள் மனுக்கள் பரிசீலிக்கப்படும். 24ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள். டெல்லியில் மொத்தம் ஒரு கோடியே 46 லட்சத்து 92,136 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 லட்சத்து 55 ஆயிரம் பேர் ஆண்கள். 66 லட்சத்து 35 ஆயிரம் பெண் வாக்காளர்கள். கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக டெல்லியில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று கெஜ்ரிவால் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

More News >>