ஜே.என்.யு தாக்குதலை கண்டித்து மும்பையில் மாணவர் போராட்டம்

ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மும்பையில் மாணவர்களும், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட பலருக்கும் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், ஜே.என்.யு மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து பல நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையில் கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இன்று(ஜன.7) காலை ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு போராட்டம் நடத்தினர். ஜே.என்.யு தாக்குதலை கண்டித்தும், டெல்லி போலீசாரை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்று மைதானத்தில் காவலில் வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

More News >>