நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணை ஜன.9ம் தேதி தள்ளிவைப்பு

பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். அவர், இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசினார் என கூறி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, நெல்லை மேலப்பாளையம் போலீசார், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். பின்னர், அவரை கைது செய்ய வேண்டுமென்று பாஜகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை கடந்த ஜன.1ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இதன்பின், அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். தொடர்ந்து அவரது சார்பில் நெல்லை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக பதிலளிக்கக் கூறி, போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More News >>