ஜே.என்.யு தாக்குதல் குறித்து உண்மையறிய காங்கிரஸ் குழு சோனியா அறிவிப்பு
ஜே.என்.யு தாக்குதல் சம்பவத்தில் உண்மை நிலையை அறிய காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது.
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து பாஜகவின் மாணவர் சங்கமான ஏ.பி.வி.பி.யும், இடதுசாரி சங்கமான எஸ்.எப்.ஐ.யும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிவதற்காக காங்கிரஸ் ஒரு குழுவை நியமித்துள்ளது. 4பேர் கொண்ட இந்த குழு, ஜே.என்.யு வன்முறைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்கும் என்று கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.