மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம்.. தமிழகத்தில் பாதிப்பில்லை
மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதே போல், தொழிலாளர்களின் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர் சங்கங்களும், வங்கி ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 25 கோடி போர் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம், மத்திய பணியாளார் துறை அமைச்சகம் இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்தது. அரசு ஊழியர்கள் எந்தவிதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அந்த அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மாநில அரசும் இதே போல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. மேலும், ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் ஹவுரா ரயில் நிலையத்தில் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் அதிகாலையில் திரண்டு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதே போல், வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.