பலமான ராணுவம் இருந்தாலும் போரை விரும்பவில்லை.. அமெரிக்க அதிபர் பேச்சு

உலகிலேயே அமெரிக்கா பலம் பொருந்திய ராணுவத்தைக் கொண்டிருந்தாலும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது 15 ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். ஈராக்கில் 2 இடங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும் என்றும் இது உலகப் போராக கூட மாறலாம் என்றும் பலவாறாக பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அமெரிக்க வீரர்கள் யாரும் இறக்கவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தாக்குதலில் குறைந்த அளவு சேதம்தான் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஈரான் தளபதி சொலெய்மணி, அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த குறிவைத்திருந்தார். பயங்கரவாதிகளை ஊக்குவித்தார். ஆனால், இப்போது ஈரான் நிலைகுலைந்து போயிருப்பது தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நல்லது. குறிப்பாக உலக நாடுகளுக்கு மிகவும் நல்லது.

அமெரிக்கா உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவப் படைகளையும், கருவிகளையும் கொண்டிருக்கிறது. ஆனால், அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். ஈரான் நாட்டுடன் 2015ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து 2018ல் நாங்கள் விலகி விட்டோம். மற்ற நாடுகளும் விலகி, புதிய ஒப்பந்த்தை போட வேண்டும். நான் அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுக்க விட மாட்டேன். ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள், இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அதிக அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

 

More News >>