பொங்கல் 2020 ! சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கியது..
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 4 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் உள்ள மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். இதனால், பஸ், ரயில்களில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இந்த ஆண்டும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 15 முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையங்களில் தலா ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்திவு மையத்தின் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் மற்றும் வழக்கமான பஸ்கள் என்று மொத்தம் 30,120 பஸ்கள் பொங்கலை ஒட்டி இயக்கப்படும். இவற்றில், சென்னையில் இருந்து மட்டும் 16,075 பஸ்கள் இயக்கப்படும் என்று தெரவித்தார்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.