எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற 2 பேர் பயங்கரவாதிகள்! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் ஜன.8ம் தேதி இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தார். இரவு 9 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ காரில் வந்த 2 இளைஞர்கள் கைத்துப்பாக்கியால் வில்சனை 3 முறை சுட்டனர். சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் வருவதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி விட்டார்கள்.
தலை, மார்பு, கால் பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில் வில்சன் கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் மயங்கிய வில்சனை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி நேற்று(ஜன.9) திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்து வில்சன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பருத்திவிளையில் உள்ள வில்சனின் வீட்டுக்குச்சென்று வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி(52), மகள்கள் ரினிஜா(25), வினிதா(21) ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அங்குள்ள சி.எஸ்.ஐ. ஆலய கல்லறை தோட்டத்தில் வில்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு மணல் கடத்தல் காரணமாக இருக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், கொலையாளிகள் பயங்கரவாதிகள் என்று சிறிது நேரத்தில் தெரிய வந்தது. சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டு, கொலையாளின் படங்களையும் வெளியிட்டனர்.
சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளில், 2 பேர் அங்குள்ள பள்ளிவாசல் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து மெயின் ரோட்டுக்கு வருவதும், அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தியுடன் சோதனை சாவடிக்குள் செல்வதும் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த 2 பேரும் சோதனை சாவடியை விட்டு வெளியே ஓடி அங்குள்ள குறுகலான தெரு வழியாக தப்பியதும் தெரிந்தது. இருவரும் தலையில் குல்லா வைத்திருந்தனர். அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
மேலும், கொலை தொடர்பான தகவல்களையும், சி.சி.டி.வி காட்சிகளையும் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கேரள போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து, அந்த பயங்கரவாதிகள் 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டனர். அவர்களில் ஒருவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் என்பதும், மற்றொருவர் நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் என்பதும் தெரியவந்தது. இவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும், கேரள போலீசார் கூறுகையில், அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் நண்பர்கள் என்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்தனர். மேலும், அப்துல் சமீம் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினரும்(என்.ஐ.ஏ) தேடிவருகின்றனர்.