பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள்.. உள்துறை அமைச்சகம் விசாரணை
உ.பி.யில் நடந்த வன்முறைகளில் தொடர்புடைய பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட், முசாபர்நகர், லக்னோ போன்ற இடங்களில் கடந்த டிசம்பரில் நடந்த கலவரங்களில் 19 பேர் வரை பலியாகினர்.
இந்நிலையில், உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று உ.பி. மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது. கர்நாடகாவும் இதே போல் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதற்கிடையே, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாப்புலர் பிரன்ட் அமைப்புக்கு வன்முறைகளில் தொடர்புள்ளதாக தெரிய வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் அந்த அமைப்பின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. இது குறித்து, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த தகவல் வருமாறு:ஏற்கனவே தடை செய்யப்பட்ட சிமி என்ற முஸ்லிம் அமைப்பின் புதிய அமைப்பாக பி.எப்.ஐ செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த அமைப்புக்கு ஐக்கிய அரபு நாடுகள், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள முஸ்லிம் பழமைவாத அமைப்புகள் மூலமாக நிதி வருகிறது.
இந்த நிதியைக் கொண்டு இந்தியாவில் பழமைவாதப் பிரச்சாரம் மேற்கொள்வது தெரியவந்துள்ளது. இதனால், பி.எப்.ஐ. அமைப்புக்குள்ள வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.