பஸ், லாரி மோதி 20 பேர் பலி.உ.பி.யில் பயங்கர விபத்து
உத்தரபிரதேசத்தில் டபுள்டெக்கர் பஸ்சும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒரு டீலக்ஸ் டபுள் டெக்கர் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. இந்த பஸ் கன்னோஜ் மாவட்டம் கிலோய் என்னும் கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் டீசல் டேங்க் தீப்பற்றியதில் பஸ்சும், லாரியும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தன. அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை காப்பாற்றினர். ஆயினும் இந்த விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 21 பேர் மீட்கப்பட்டு சிப்ராமு என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஸ்சில் எத்தனை பேர் பயணம் செய்தனர், எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.