திமுகவுடன் மனக்கசப்பு எதுவும் ஏற்படவில்லை.. காங்கிரஸ் தலைவர் மழுப்பல்
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று மாலை விடுத்த கூட்டறிக்கையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே தி.மு.க. தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.அதே போல், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சென்னை திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், மாவட்ட அளவில் தான் ஒப்பந்தம் பேசப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது சில மாவட்டங்களில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். இதை கூட்டணிக்குள்ளேதான் பேசி தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி வெளிப்படையாக விமர்சிப்பது நல்லதல்ல என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுகவுடன் எப்போதும் போல நட்புறவு நீடிக்கிறது. திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகவில்லை. அறிக்கையோடு முடிந்தது அந்த பிரச்னை. திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி. இதை பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.