தர்பார் சினிமா படத்தில் சசிகலா சர்ச்சை வசனம்.. அ.ம.மு.க, ரஜினி ரசிகர்கள் மோதல்
ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாவிட்டாலும், முதல் நாளிலேயே ரூ.50 கோடி வரை வசூலாகியுள்ளது. இதற்கிடையே படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
அதாவது, இப்போதெல்லாம் சிறையில் இருப்பவர்கள் ஷாப்பிங் செல்கிறார்கள் என்று வசனம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா சுரிதார் அணிந்து ஷாப்பிங் சென்றதாக ஒரு பிரச்னை கிளம்பியது. அதை குறிக்கும் வகையில் அந்த வசனம் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிறையில் இருந்து சசிகலா வெளியே செல்லவே இல்லை என்று விசாரணை அதிகாரியே சொல்லி விட்டார் என்றும், வேண்டுமென்றே அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ள வசனத்தை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். உடனடியாக, படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனத்தை நீக்குவதாக கூறியுள்ளது. மேலும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அந்த வசனம் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் மக்கள் செல்வன் டி.டி.வி போர் படை என்று குறிப்பிட்டு டி.டி.வி ஆதரவாளர் மணிகண்டன் என்பவர் ஒரு கண்டன போஸ்டர் ஒட்டியிருக்கிறார். அதில் ரஜினியை மறைமுகமாக வசைபாடியுள்ளார். பிழைக்க வந்த நீ பிழைத்துக்கொள்.. வணிகத்தில் அரசியலை வைக்காதே.. மதுரை விமான நிலைய சம்பவத்தை மறந்துவிடாதே.. திருத்திக்கொள்.. என்ற வாசகங்கள் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.
இது அந்த மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் எங்கள் தலைவர் ரஜினியைத் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அதே சமயம், சசிகலா தரப்பினரோ, பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு காசு தராமல் அடிக்கும் அரசியல்வாதி... 20 வயது இளம்பெண்ணுக்கு குழந்தையை கொடுக்கும் 60 வயது அரசியல்வாதி என்றெல்லாம் வசனம் எழுத வேண்டியது தானே என்று பதிலுக்கு கேட்கிறார்கள்.