சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி வழக்கு.9 நீதிபதிகள் அமர்வு விசாரண

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண் குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனி தீர்ப்பு கூறினார். மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். அதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ரோகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.

தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர். இதன்பின்னர், சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிந்து அம்மிணி என்ற பெண் சபரிமலைக்கு செல்வதாக அறிவித்து. போலீஸ் பாதுகாப்பு கேட்டு எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற போது பக்தர்களால் தாக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு செல்ல தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பாத்திமா என்ற இதே போல் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை விசாரித்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும். எனவே, அதுவரை நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

அதே சமயம், சபரிமலையில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் பிரச்சினையில் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்னையை பூதாகரமாக்க விரும்பவில்லை. அதனால், அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலையில் பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது.இவ்வாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சபரிமலை வழக்கின் மறு ஆய்வு மனுக்களை இன்று முதல் விசாரிக்கவுள்ளது.

 

More News >>