டெல்லி பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?அமித்ஷா 7 மணி நேர ஆலோசனை

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்.11ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக அக்கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வீட்டில் நேற்று மாலை உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் டெல்லி பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர், மாநில தலைவர் மனோஜ் திவாரி, விஜய் கோகல், விஜேந்தர் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும், பிரச்சாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் அதிக வாய்ப்பு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து விட்டதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்வார்கள். இதையடுத்து, இன்றிரவு அல்லது நாளை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

 

More News >>