டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு
கும்பகோணம் வங்கியில் பணியாற்றும் டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. அவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சென்னை வந்து ரயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்தார். இரவு 9.45 மணிக்கு வந்து சேர்ந்த அவர் தான் தங்க வேண்டிய விடுதிக்கு ஆட்டோவில் சென்றார்.ஆட்டோ டிரைவர் அவரிடம் அதிக பணம் வசூலிக்கத் திட்டமிட்டு, அருகில் உள்ள விடுதிக்கு அப்பெண்ணை நேரடியாக அழைத்து செல்லாமல் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் சென்றார். ஆட்டோ டிரைவர் தன்னை வேறு எங்கோ அழைத்து செல்கிறார் என்று உணர்ந்த அந்த பெண், ஆட்டோவுக்கு வெளியே பார்த்து கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பாதியிலேயே இறக்கி விட்டுவிட்டு போனார்.
இரவு நேரத்தில் தனியாக தவித்த அந்த பெண், அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தினார். அதை ஓட்டி வந்த வாலிபர், அந்த பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த பைக்கை தொடர்ந்து வாலிபரின் நண்பர் ஒருவரும் பைக்கில் வந்தார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணை செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அந்த பெண்ணால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கிடையே அந்த வாலிபர்கள் இருவரம் மேலும் 2 பேரை செல்போனில் அழைத்து வரவைத்தனர். பின்னர், வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அதற்கு பின், ஒரு ஆட்டோவை அழைத்து ஒரு வாலிபர் மட்டும் அந்த பெண்ணை அழைத்து கொண்டு கும்பகோணம் நகருக்குள் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஆட்டோவில் வந்தபோது பெண்ணுடன் வந்த வாலிபர், ஆட்டோ டிரைவரின் செல்போனை இரவல் வாங்கி தனது நண்பர்களிடம் பேசியிருக்கிறார்.அந்த பெண் பின்னர் விடுதிக்கு சென்று விட்டு, மறு நாள் வங்கியில் போய் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வங்கி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அவர்கள் உதவியுடன் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது அந்த ஆட்டோவின் எண்ணை தெளிவாக குறிப்பிட்டார்.
இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்தனர். அவரது செல்போனில் பதிவான எண்ணை கொண்டு ஒரு வாலிபரை மடக்கினர். அடுத்து மற்ற மூவரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். கும்பகோணம் அஞ்சுகம் நகரை சேர்ந்த தினேஷ் (24), மோதிலால் தெருவை சேர்ந்த வசந்த்(21), மூப்பனார் நகரை புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த அன்பரசன் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் சாட்சியங்கள் உறுதியாக இருந்ததாலும், போலீஸ்தரப்பில் சரியாக வழக்கை நடத்தியதாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தத. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி இன்று(ஜன.13) தீர்ப்பு வழங்கினார். தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.