மதுபோதையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா ஸ்ரீதேவி ? தடயவியல் அறிக்கையில் சொல்வது என்ன..
துபாய்: குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்தார் எனவும் அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போணி கபூர் மற்றும் இளைய மகள் ஆகியோர் அங்கு சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, போணி கபூரும் அவரது மகளும் மும்பைக்கு திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரியுடன் துபாயிலேயே தங்கிவிட்டார்.
இதனால், ஸ்ரீதேவி ஓட்டல் ஒன்றில் அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு இன்பதிர்ச்சி மற்றும் விருந்து கொடுக்க வேண்டும் என்று போணி கபூர் திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு போணி கபூர் ஸ்ரீதேவி தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று இன்பதிர்ச்சி கொடுத்தார். அப்போது ஸ்ரீதேவி உறங்கிக் கொண்டு இருந்தார்.
பின்னர், தன்னுடன் விருந்தில் கலந்துக் கொள்ளும்படி போணி ஸ்ரீதேவியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட ஸ்ரீதேவி தான் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு குளியல் அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் ஸ்ரீதேவி வெளியே வராததால், போணி கபூர் கதவை தட்டி உள்ளார். இதற்கு ஸ்ரீதேவியிடம் இருந்து பதில் வராததால், சந்தேகமடைந்த போணி கபூர் குளியல் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டிக்குள் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போணி கபூர் உடனடியாக அவரது நண்பரை அழைத்து அவரது உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.ஆனால், ஸ்ரீதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இந்த அறிக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், பிரேத பரிசோதனையின் அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை வந்துள்ளதை அடுத்து இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டது.
ஆனால், தடயவியல் அறிக்கையில் ஸ்ரீதேவி மாரமடைப்பால் இறக்கவில்லை என்றும் நீரில் மூழ்கியே இறந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கோஹால் இருப்பதும் தெரியவந்தது.இதனால், ஸ்ரீதேவி மது குடித்துவிட்டு அதன் போதையில் குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் சதிச்செயல் எதுவும் இல்லை என்பதை தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில், மாரடைப்பால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வெளியாகிவுள்ள சம்பவம் அவரது ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.