பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் காவி திருவள்ளுவர் படத்தை அகற்றிய துணை ஜனாதிபதி..
திருவள்ளுவர் நாளான இன்று, ட்விட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதவிட்ட துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதை அகற்றி விட்டு, அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார்.
ஆண்டுதோறும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருவள்ளுவருக்கு நெற்றியில் பட்டை போட்டு, குங்குமம் வைத்து, காவி உடையில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டனர். அதற்கு திமுக உள்பட திராவிட இயக்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர், அவரை இந்து துறவி போல் சித்தரிப்பதா என்று கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்த துறவிதான் என்று பாஜகவினர் வாதாடினார்கள். மேலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் எழுதியிருந்தாலும், தொழிலால் அவர்கள் வேறுபட்டவர்கள் என்று சனாதன தர்மத்தையே(குலத்தொழிலை வலியுறுத்துவது) அவர் போதித்தார் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு பல்வேறு இனத்தவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில், காவி உடை திருவள்ளுவர் படத்தை இணைத்திருந்தார்.
உடனே, திமுக எம்.பி. செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட் போட்டனர். அதில், திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த காவி உடை திருவள்ளுவர் படத்தை நீக்கினார். வெள்ளையுடையில் திருவள்ளுவர் இருக்கும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தை வெளியிட்டு தமிழில் வாழ்த்து போட்டார்.
அதில் அவர், சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.
அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.