நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ம் தேதி தூக்கு.. கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் பிப்.1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு துணை மருத்துவம் படித்து கொண்டிருந்த இளம் பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டு சென்றனர். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். போலீசார் புலன்விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவா்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு, ஜன. 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே, மரண தண்டனையை எதிர்த்து முகேஷ்சிங், வினய் சா்மா ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவும் கடந்த வாரம் தள்ளுபடியானது.

இதைத் தொடர்ந்து, முகேஷ்சிங் சார்பில் ஜனாதிபதியிடமும், டெல்லி துணை நிலை கவர்னரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. கவர்னர் அந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதில், குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க பரிந்துரை செய்திருந்தார். உள்துறை அமைச்சகமும் அந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதிக்கு கடந்த 16ம் தேதி அனுப்பி வைத்தது. முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி உடனடியாக நிராகரித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கருணை மனு நிலுவையில் உள்ளதால் மரணதண்டனை நிறைவேற்றுவதை தள்ளி வைக்கக் கோரி முகேஷ் சிங், டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்ட தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் இர்பான் பதான் தெரிவித்தார்.இதையடுத்து, குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி, பிப்ரவரி 1ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

More News >>