ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்..? போனி கபூரிடம் போலீஸ் விசாரணை
துபாய்: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, அவரது கணவர் போனி கபூரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும் நீரில் மூழ்கியே உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கோஹால் கலந்திருப்பதும் தெரியவந்தது.
ஆனால், அவரது மரணத்தில் சதிச் செயல்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டது. இதனால், ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாக துபாய் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சில சட்ட சிக்கல்களால் எம்பார்மிங் செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை பதிவு செய்துள்ளதாகவும் இதற்காக, புர் துபாய் போலீஸ் ஸடேஷனுக்கு போனி கபூர் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. அங்கு, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு போனி கபூர் பதிலளித்ததாகவும் அதனை போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.