மன்னிப்பு கேட்க மாட்டேன்.. ரஜினி பேச்சுக்கு பாஜக ஆதரவு..கொளத்தூர் மணி எதிர்ப்பு
பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி சொன்னது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கொளத்தூர் மணி, வன்னி அரசு போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், ரஜினி பேச்சை பாஜக வரவேற்றுள்ளது.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், பெரியார் ஊர்வலம் பற்றி வெளியான துக்ளக் பத்திரிகையைத்தான் ரஜினி காட்டியிருக்க வேண்டுமே தவிர, ஏதோ ஜெராக்ஸை காட்டக் கூடாது. அவர் நேர்மையானவர் என்றால், துக்ளக் ஏட்டை காண்பிக்க வேண்டும். 1971ம் ஆண்டு வெளியான துக்ளக் ஏடு இவருக்கு கிடைக்காதா? இவர்தான் துக்ளக் நிர்வாகத்துடன் நெருக்கமாக இருக்கிறாரே?
ஏற்கனவே, ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பொதுவெளியில் அவதூறாக பேசி விட்டு, பின்னர் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றார்கள். இவர்கள் வரிசையில் இப்போது ரஜினிகாந்தும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகிறார். ஆனால், ரஜினி இப்படி நடந்து கொள்வதை நாங்கள் கேவலமான செயலாகவே பார்க்கிறோம் என்றார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்ன ஹெச்.ராஜாவுக்கும், பெரியார் மீது அவதூறு பரப்பும் ரஜினிகாந்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? தமிழ் மண்ணின் சமூகநீதி அடையாள அரசியலை அழிக்கத் துடிக்கும் தமிழ்நாடு பாஜக கும்பலோடு இணைந்துள்ளார் ரஜினி என்பதை வெளிப்படுத்தி உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதே சமயம், ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியதை பாஜகவினர் வரவேற்றுள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஈ.வெ.ரா குறித்து நான் பேசியது உண்மையே. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: ரஜினிகாந்த். சபாஷ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.ரஜினியின் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற பதில் தற்போது தமிழக அரசியலை சூடேற்றியுள்ளது.