நடிகர் ரஜினிக்கு வாதாடத் தயார்.. சுவாமி ட்வீட்

பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசுகையில், 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால், சோ சார் மட்டும் துணிச்சலாக துக்ளக் பத்திரிகை அட்டையில் வெளியிட்டார். அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், சோ சார் அதை மீண்டும் அச்சடித்து விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.ஆனால், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும், பொய் சொல்லும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

அதே சமயம், தான் சொன்னது கற்பனையானது அல்ல என்றும், இல்லாததை சொல்லாததால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினி பேட்டியளித்தார். இந்த சூழலில், வழக்கமாக ரஜினியை விமர்சித்து வரும் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி இன்று மாறியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்முறை ஒரு மாற்றத்திற்காக நான் ரஜினி பக்கம் இருக்கிறேன். பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில் ரஜினி சொன்னது சரிதான். துக்ளக்கில் சோ அந்த உண்மையை வெளியிட்டார்.

சினிமா நடிகர் ரஜினி தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் அவருக்கு நீதிமன்றத்தில் உதவத் தயாராக உள்ளேன்என்று கூறியுள்ளார்.

More News >>