சந்திரயான்-3 திட்டம் முழுவீச்சில் நடைபெறுகிறது.. இஸ்ரோ தலைவர் பேட்டி

சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ) சமீபத்தில் சந்திரயான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. அதில் தகவல் தொடர்பு துண்டானதால், முழு பயனை பெற முடியாமல் ?அத்திட்டம் தோல்வியுற்றது. இந்நிலையில், சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் இன்று(ஜன.22) நடந்த நிகழ்ச்சியில் சிவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டப்படி நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அதே போல், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இம்மாத இறுதியில் ரஷ்யாவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். ஏற்கனவே 1984ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, ரஷ்ய விண்கலத்தில் விண்ணுக்கு சென்றார். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்கலத்தில் இந்திய விஞ்ஞானிகள் அனுப்பப்படுவார்கள்.இவ்வாறு சிவன் தெரிவித்தார்.

விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஏற்கனவே ககன்யான் திட்டத்தைப் பற்றி கூறியிருந்தார். ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் பயன்படுத்தப்படும். ஒரு வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>