சட்டசபையில் ஜெயலலிதா படம் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்த வழக்கில், படம் திறப்பது குறித்து பேரவைத் தலைவர் தான் முடிவு செய்வார் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட படத்தை அகற்றக் கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் நேற்று திங்களன்று (பிப். 26) விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பேரவைத் தலைவரின் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன கேள்வி உள்ளது. அதற்கு இந்த நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது வரும் பேரவைத் தலைவர் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும். பேரவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.
மேலும், தனி மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதாலேயே எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த பேரவைத் தலைவரின் உத்தரவு குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்த்த வழக்கையும் சேர்த்து மார்ச் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.