ஊழல் குறியீட்டில் 80வது இடத்தில் இந்தியா.. 78ல் இருந்து பின்தங்கியது..

ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது.

ஊழல் மலிந்துள்ள நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள் பற்றி ஆய்வு செய்து, டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுகிறது. ஊழல் மிகவும் குறைந்த நாட்டுக்கு முதல் ரேங்க் என்று தொடங்கி, 100வது ரேங்க் வரை தரவரிசைப் பட்டியல் வெளியிடுகிறது. 2019ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி, இ்ந்தியா வெறும் 41 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று 80வது ரேங்க் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 78வது ரேங்க் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஊழல் மிகவும் குறைந்த நாடாக 87 மதிப்பெண்கள் பெற்று முதல் ரேங்க் பெற்றிருப்பது டென்மார்க். இதே போல், நியூசிலாந்து நாடும் 87 மதிப்பெண்ணுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 77 மதிப்பெண் பெற்று 12வது ரேங்க், அமெரிக்கா 69 மதிப்பெண்ணுடன் 23வது ரேங்க், சீனா 41 மதிப்பெண்ணுடன் 80வது ரேங்க், பிரேசில் 35 மதிப்பெண்ணுடன் 106வது ரேங்க், பாகிஸ்தான் 32 மதிப்பெண்ணுடன் 120வது ரேங்க், வங்கதேசம் 26 மதிப்பெண்ணுடன் 146வது ரேங்க் பெற்றிருக்கின்றன.

ஆய்வறிக்கையில், அரசியலில் பணம் விளையாடுவது, நிர்வாக முடிவுகள் எடுப்பதில் அதிகமான நிர்ப்பந்தங்கள், அரசு நிர்வாகத்தில் கார்ப்பரேட் குரூப்களின் ஆதிக்கம் ஆகியவை காரணமாக ஊழலை கட்டுப்படுத்துவதில் தேக்கம் அல்லது சரிவு இருப்பது, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற ஜனநாயக நாடுகளில் தெரிகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், ஊழலை கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான நாடுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியலில் அதிகமான பணம் விளையாடும் நாடுகளில் செல்வாக்கு மிக்கவர்களும், அரசுடன் தொடர்புள்ள நபர்களுமே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

More News >>